விஷபாட்டிலுடன் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

சூறாவளியால் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து விஷபாட்டிலுடன் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் துண்டிப்பால் பயிர்கள் கருகுவதாக அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

Update: 2022-05-31 19:27 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள பரவளூர் கிராமத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கு நிலத்தடி நீர் பாய்ச்சப்படுகிறது. கடந்த வாரத்தில் சூறாவளியுடன் மழை பெய்ததால் பரவளூரில் 6 மின்கம்பங்கள் சாய்ந்தன.

சில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. சில இடங்களில் மரக்கிளைகளில் மின்கம்பிகள் பின்னி பிணைந்து காணப்படுகிறது. இதனால் அந்த கிராமம் மட்டுமின்றி விளைநிலங்களுக்கு செல்லக்கூடிய மின் வினியோகமும் தடைபட்டது.

மின்சாரம் துண்டிப்பு

இது பற்றி அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று மின்கம்பிகளை சரிசெய்து கிராமத்திற்கு மட்டும் மின்வினியோகம் செய்தனர். ஆனால் விவசாய நிலப்பகுதியில் சாய்ந்த மின்கம்பங்களை மீண்டும் நடவில்லை. அறுந்து கிடந்த மின்கம்பிகளை சரிசெய்யவில்லை. மாறாக அந்த பகுதிக்கு செல்லக்கூடிய மின்சாரத்தை துண்டித்து விட்டு சென்றனர்.

கருகும் பயிர்கள்

ஒருவாரமாகியும் மின்வினியோகம் செய்யாததால் மின்மோட்டார்களை இயக்கி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் நெற்பயிர்கள் கருகுகிறது.

இதனால் வேதனையடைந்த விவசாயிகள், விருத்தாசலம் மின்வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்டனர். ஆனால் அதிகாரிகளோ மீண்டும் மின்கம்பங்களை நட்டு மின்வினியோகம் செய்யாமல் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

விஷபாட்டிலுடன் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த பரவளூர் விவசாயிகள் நேற்று விஷபாட்டிலுடன் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக மின்வினியோகம் செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். மேலும் மின்சாரம் துண்டிப்பால் பயிர்கள் கருகுவதாகவும், உடனடியாக மின்வினியோகம் செய்யாவிட்டால் விருத்தாசலம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவதோடு, அங்கேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்