வெளிமாவட்ட வியாபாரிகள் விற்கும் ஆர்கானிக் உரங்களை விவசாயிகள் வாங்க வேண்டாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிமாவட்ட வியாபாரிகள் விற்கும் ஆர்கானிக் உரங்களை விவசாயிகள் வாங்க வேண்டாம் என்று வேளாண் இணை இயக்குனர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள், ஆர்கானிக் உரம் என்ற பெயரில் விற்பனை செய்யும் உரங்களை விவசாயிகள் வாங்க வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆர்கானிக் உரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தார், புதூர் ஆகிய வட்டாரங்களில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் மானாவாரி பயிர் சாகுபடி பணிக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி உள்ளனர். இதனை பயன்படுத்தி வெளி மாவட்டங்களைச் சார்ந்த வியாபரிகள் ஆர்கானிக் உரங்கள் என்ற பெயரில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து அவர்களின் தோட்டங்களுக்கே கொண்டு சென்று உரங்களை விற்று வருகின்றனர்.
இந்த உரங்களில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவு தெரியாத நிலையில் விவசாயிகள் அதனை வாங்கி பயன்படுத்த வேண்டாம். தற்போது, மாவட்டத்தில் 2 ஆயிரத்து 900 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரம், 3 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் அடியுரத் தேவைக்காக கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கண்ட உரங்களை வாங்கி அடியுர பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் தெரிவிக்கலாம்
மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து ஆர்கானிக் உரங்கள் என்ற பெயரில் விவசாயிகளிடையே விற்பனை செய்ய வரும் வியாபாரிகள் குறித்து அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களிலோ அல்லது தூத்துக்குடி வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநருக்கு 96554 29829 என்ற எண்ணிலோ உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.