வியாபாரிகளிடம் நெல்லை விற்கும் விவசாயிகள்

கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் அளவு தளர்த்தப்படாததால் வியாபாரிகளிடம் நெல்லை விவசாயிகள் விற்று வருகின்றனர்.

Update: 2023-10-15 20:30 GMT

குறுவை நெல் அறுவடை

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இயல்பான பரப்பளவான 3.25 லட்சத்தை மிஞ்சி 5.28 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் பயிரிடப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பல இடங்களில் பயிர்கள் கருகும் சூழ்நிலையில் உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கருகும் பயிரை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தநிலையில் ஆழ்குழாய் கிணறு மூலமும், முன்கூட்டியே குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் ஆர்வம்

அறுவடை செய்யும் நெல்லை வாங்குவதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் தனியாரிடம் நெல்லை விற்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் வரை இருந்தால் தான் கொள்முதல் செய்யப்படுகிறது. 17 சதவீதத்திற்கு மேல் இருந்தால் நெல்லை காய வைத்து கொண்டு வரும்படி விவசாயிகளிடம் கொள்முதல் பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் நெல்லை தூற்றி கொண்டு வர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. நெல்லை காய வைத்து கொண்டு சென்றாலும் உடனடியாக கொள்முதல் செய்யப்படுவதில்லை. இதனால் 3 நாட்கள் வரை நெல்லுடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருவதால் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க சிரமமாக இருக்கும் என கருதி வியாபாரிகளிடம் நெல்லை விற்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சிரமம்

தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்றனர். விவசாயிகள் இருக்கும் இடத்திற்கே வியாபாரிகள் தேடி வந்து நெல்லை வாங்கி சென்றனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு மேல் இருந்தாலும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆனால் நெல் கொள்முதல் நிலையங்கள் வாங்க மாட்டார்கள். நெல்லை காய வைக்க 3 நாட்கள் வரை ஆகும். அதுவும் மழை பெய்யாமல் இருக்க வேண்டும். மழை பெய்தால் இன்னும் சிரமம் தான். காய வைத்த நெல்லையும் உடனடியாக விற்க முடியாது.

சிட்டா அடங்கல் வாங்கி கொண்டு 1 வாரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வியாபாரிகளிடம் நெல்லை விற்பதால் எங்களது வேலை சீக்கிரம் முடிந்துவிடுகிறது. வியாபாரிகளிடம் நெல்லை விற்பதற்கும், கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு ரூ.35 முதல்ரூ.40 வரை கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. வியாபாரிகள் 60 கிலோ மூட்டையாக கொள்முதல் செய்கின்றனர். ஆள்கூலி, காவல் காக்கும் வேலை எல்லாம் தேவையில்லாதது. இதனால் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்கிறோம். மழை பெய்தால் வியாபாரிகளும் வர மாட்டார்கள். அந்த நேரத்தில் கொள்முதல் நிலையங்களை தான் நாடி இருக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்