3-வது நாளாக விவசாயிகள் குழந்தைகளுடன் போராட்டம்

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 நிர்ணயம் செய்ய கோரி 3-வது நாளாக விவசாயிகள் குழந்தைகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-03 22:30 GMT

கோத்தகிரி

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 நிர்ணயம் செய்ய கோரி 3-வது நாளாக விவசாயிகள் குழந்தைகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழந்தைகளுடன் உண்ணாவிரதம்

பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.33 நிர்ணயம் செய்ய கோரியும்,சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தியும் நாக்குபெட்டா சீமை படுகர் நலச்சங்கம் சார்பில், கடந்த 1-ந் தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டத்தின் 3-வது நாளான நேற்று குண்டாடா மக்கள், தங்களது கிராமத்தில் இருந்து கையில் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக நட்டக்கல் கிராமத்துக்கு வந்தனர். அங்கு உண்ணாவிரத போராட்டத்தை குண்டாடா ஊர் தலைவர் சந்திரன், நிர்வாகிகள் குமார், தருமன், நஞ்சன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் விவசாயிகள் தங்களது குழந்தைகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது நீலகிரி சிறு விவசாயிகளின் தேயிலை விவசாயத்தை காப்பாற்ற வேண்டும், பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பதாகைளை கையில் ஏந்தி இருந்தனர்.

பச்சை தேயிலை

இதேபோல் தும்மனட்டியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாக்குபெட்டா படுகர் நலச்சங்க தலைவர் பாபு தலைமை தாங்கினார். போராட்டத்தில் 11 கிராம மக்கள், குழந்தைகள், பெண்கள் கலந்துகொண்டனர். தொடர் போராட்டம் காரணமாக விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணியை நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் தேயிலைத்தூள் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதேபோல் இத்தலார் கிராமத்திலும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்