உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
இழப்பீடு வழங்காததால் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு, செம்பட்டி அருகே உள்ள தெற்கு மேட்டுப்பட்டி வழியாக உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணி, தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. உயர்மின் கோபுரம் அமைக்க இடம் கொடுத்த தெற்கு மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு மின்சாரத்துறை சார்பில் இழப்பீடு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று முன்தினம் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக, பணியை நிறுத்தி விட்டு மின்சார வாரியத்துறையினர் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதற்கிடையே பணி செய்யவிடாமல் தடுத்ததாக, மின்வாரிய உதவி பொறியாளர் லெனின் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.