நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு அனுமதித்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்

தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

Update: 2023-04-04 21:18 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

போராட்டத்தை முன்னெடுக்கும்

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன்:- மத்திய அரசு காவிரி டெல்டாவில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி இருக்கிறது. எந்தந்தெந்த பகுதியில் என்னென்ன தரத்தில் இருக்கிறது என ஆய்வு செய்வது என்பதே நிலக்கரி எடுப்பதற்கான முன்னேற்பாடு தான். காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆகும்.தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் என்ன கனிமவளம் கிடைக்கிறது என ஆய்வு செய்வதே எடுப்பதற்குதான். எனவே ஆய்வு செய்ய தமிழக அரசு அனுமதிக்க கூடாது. தமிழக முதல்-அமைச்சரும் ஆய்வு செய்யக்கூடாது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் வேளாண் பூமியான டெல்டா பகுதி கனிம வள சுரங்கங்களின் பாதாள பூமியாக மாறி விடும். எனவே தமிழக அரசு, ஆய்வு செய்யக்கூடாது என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இதனை முறியடிக்க போராட வேண்டும். அத்தகைய போராட்டங்களை காவிரி உரிமை மீட்புக்குழு முன்னெடுக்கும்.


விவசாயிகளுக்கு எதிரானது

விவசாய தொழிலாளர் சங்க துணைத்தலைவர் வக்கீல் ஜீவக்குமார்:- தமிழக பட்ஜெட்டில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் நீர் மேலாண்மைக்கு பணம் ஒதுக்கியதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் நிலக்கரி எடுக்க அனுமதிப்பது என்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் சட்டத்திற்கு எதிரானது. நிலக்கரியையோ, பெட்ரோலையோ இந்தியாவில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் எடுக்கலாம். நிலக்கரியை வெட்டி சோறு ஆக்க முடியாது. இது நெல் விளையும் பூமி, குடிநீருக்கு ஆதாரமான பகுதி. இந்த பகுதியில் இந்த திட்டத்தை அறிவித்து இருப்பது என்பது விவசாயிகளுக்கு எதிரானது.

மத்திய அரசு காவிரி டெல்டாவை பாதிக்கும் வகையில் திட்டங்களை அறிவிப்பதை கைவிட வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வரும் போது இது போன்ற திட்டங்களுக்கு அனுமதி கொடுத்து விடுவார்களோ? என்ற பயம் விவசாயிகளிடையே உள்ளது. எனவே இது போன்ற திட்டங்களை அனுமதிக்க கூடாது. இது தொடர்பாக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும். இந்த திட்டத்தை அனுமதித்தால் பச்சை கம்பளம் போர்த்திய பகுதியான டெல்டா பகுதி புல், பூண்டுக்கள் முளைக்காத பகுதியாக மாறி விடும்

முறியடிப்போம்

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பழனியப்பன்:- 2020-ம் ஆண்டு நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.தற்போது நிலக்கரி எடுப்பு திட்டத்திற்கு வீராணம் ஏரியில் இருந்து தஞ்சை மாவட்டம் வடசேரி வரை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. எந்த சூழலிலும், இந்த திட்டத்தை நாங்கள் முறியடித்து வெற்றி காண்போம். இதனை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்

மக்களை திரட்டி போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன்:-மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் நிலக்கரி எடுப்பு திட்டத்தின் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் எடுக்க அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.முப்போகம் விளையக்கூடிய விளைநிலங்களைக் கொண்ட பகுதிகளான வடசேரி நிலக்கரி பகுதி முழுவதும், சேத்தியாதோப்பு கிழக்கு நிலக்கரி பகுதி ஒரு பகுதியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிக்குள் வருகிறது. மத்திய அரசின் இதுபோன்ற திட்டங்களை எந்த வகையிலும் அமல்படுத்த மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். மத்திய அரசு இத்தகைய அறிவிப்பினை உடனே திரும்ப பெற வேண்டும். அதையும் மீறி செயல்படுத்த நினைத்தால் விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்