கால்நடை மருத்துவமனைக்கு டாக்டர்கள் வராததை கண்டித்து கத்தலூர் சாலையில் கால்நடைகளுடன் விவசாயிகள் மறியல்

கால்நடை மருத்துவமனைக்கு டாக்டர்கள் வராததை கண்டித்து கத்தலூர் சாலையின் குறுக்கே கால்நடைகளை நிறுத்தி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-30 19:07 GMT

கால்நடை மருத்துவமனை

விராலிமலை ஒன்றியம், கத்தலூர் ஊராட்சிக்குட்பட்ட அக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கத்தலூர், அக்கல்நாயக்கன்பட்டி, கவுண்டம்பட்டி, இடையபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி, சினை ஊசி போடுவது உள்ளிட்ட சிகிச்சை பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் உதவி கால்நடை மருத்துவர் தற்போது பிரசவகால விடுமுறையில் இருந்து வருகிறார். இதனால் அக்கல்நாயக்கன்பட்டி அரசு கால்நடை மருத்துவமனைக்கு மண்டையூர், ஆவூர், ஆலங்குளம் உள்ளிட்ட கால்நடை மருத்துவமனைகளில் பணியில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள் இங்கு வந்து கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பணியை மேற்கொண்டு வந்தனர்.

கால்நடைகளுடன் மறியல்

இந்தநிலையில் தற்போது அங்கு கடந்த சில மாதங்களாக கால்நடை உதவி மருத்துவர்கள் சரிவர வருவதில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். நேற்று காலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள கால்நடைகளுடன் அங்கு வந்து காலை 11 மணி வரை காத்திருந்தனர். ஆனால் கால்நடை மருத்துவர்கள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கத்தலூர் செல்லும் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை போட்டு தங்களது கால்நடைகளை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கத்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் இலுப்பூர் கால்நடை உதவி இயக்குனர் பாபு, கத்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அக்கல்நாயக்கன்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு தினமும் டாக்டர்கள் வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு தங்களது கால்நடைகளை ஓட்டிக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்