விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:காலிங்கராயன் வாய்க்காலில் 16-ந் தேதி தண்ணீர் திறக்க கோரிக்கை

காலிங்கராயன் வாய்க்காலில் 16-ந் தேதி தண்ணீர் திறக்க விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்த்தில் கோரிக்கை விடுத்தனா்

Update: 2023-05-30 21:03 GMT

காலிங்கராயன் வாய்க்காலில் வருகிற 16-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

மஞ்சள்

விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இதில் கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள் பலர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களில், கீழ்பவானி வாய்க்காலில் ஏற்கனவே கூறியபடி பழுதடைந்த பகுதிகளில் மட்டுமே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடந்த 12 ஆண்டுகளாக மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.9 ஆயிரம் நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையான கிலோவுக்கு ரூ.108.6 வழங்கப்படுவதில்லை. கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும், நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 250 ஆகவும் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

அத்திக்கடவு-அவினாசி

தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்தால் 4 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே தனிப்பட்டா வழங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் வருகிற ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பவானி ஆற்றில் இருந்து 1½ டி.எம்.சி. தண்ணீர் உபரிநீர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பவானிசாகர் அணை நிரம்பி வெளியேறும் உபரி நீரா? மழை காலத்தில் பவானி ஆற்றில் வரும் தண்ணீரா? என்பதை அதிகாரிகள் தெளிவுப்படுத்த வேண்டும்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை வரவேற்கிறோம். அதேசமயம் வருகிற காலத்தில் கீழ்பவானி, கொடிவேரி, காலிங்கராயன் பாசன திட்டங்களுக்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் விவசாயிகளை அழைத்து பேசி வழிமுறைகளை அரசு அறிவிக்க வேண்டும். கொடிவேரி அணைக்கட்டு அருகில் மூடப்பட்ட சாயப்பட்டறையை மீண்டும் திறக்க முயற்சி நடந்து வருகிறது. நீர்நிலைகளில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் மாசு ஏற்படுத்தும் ஆலைகளை இயங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. எனவே மீண்டும் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது.

தண்ணீர் திறப்பு

காலிங்கராயன் வாய்க்காலில் வருகிற ஜூன் மாதம் 16-ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும். அதற்கு முன்பாக வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். மேலும், வாய்க்காலின் இரு கரைகளிலும் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்க வேண்டும். தண்ணீர் வீணாகுவதை தடுக்கவும், கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்யும் வகையில் மதகுகளுக்கு 'பட்டர்பிளை வால்வுகளை' பொருத்த வேண்டும். வாய்க்காலில் சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தியூர் வனப்பகுதியில் வன உயிரின சரணலாயம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிடுவதற்கு முன்பு, மலைக்கிராம மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். வன உரிமை சட்டத்தின்படி முழுமையாக கிராம சபைகளை ஏற்படுத்த வேண்டும். பர்கூர் மலைப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை பட்டாக்கள், பழங்குடி இல்லாத நபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும். பவானி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மலைக்கிராமங்களில் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு சிறந்த மகசூல், உரிய விலை கிடைக்கும் வகையில் புதிய நெல் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறினர்.

பராமரிப்பு பணிகள்

கூட்டத்தில் அதிகாரிகள் பதில் அளித்து பேசும்போது கூறியதாவது:-

மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது அரசின் கொள்கை முடிவு. விவசாயிகளின் கோரிக்கை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. கொப்பரை தேங்காய் கிலோ ரூ.108.60-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டில் 4 ஆயிரத்து 700 டன் அளவுக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மலைப்பகுதி மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க ஆர்.டி.ஓ. தலைமையில் குழு அமைக்கப்பட்டு சிறப்பு முகாம் நடத்தப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளில் திரவக்கழிவுகளை சுத்தம் செய்யும் கட்டமைப்புகளை உருவாக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பேரூராட்சிகள், நகராட்சிகளில் இந்த கட்டமைப்புகளை உருவாக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. காலிங்கராயன் வாய்க்காலில் வருகிற 16-ந் தேதிக்கு தண்ணீர் திறப்பதற்கு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், வருகிற 1-ந் தேதி முதல் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு 10 நாட்களில் நிறைவடையும். இருகரைகளிலும் சாலை அமைக்க ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்