நெல் அறுவடை பணியில் ஈடுபடும் விவசாயிகள்
வேதாரண்யம் பகுதியில் வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றி விட்டு நெல் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பயிர்க்காப்பீட்டு தொகையை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றி விட்டு நெல் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பயிர்க்காப்பீட்டு தொகையை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்பயிர்கள் சாய்ந்தது
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.
மேலும் இந்த மழையால் வேதாரண்யம் அருகே ஆதனூர், கைலவானம்பேட்டை, கோவில்தாவூது, புஷ்கரணி,அகஸ்தியன்பள்ளி, கருப்பம்புலம், குரவப்புலம், கரியாப்பட்டினம், மருதூர் வடக்கு, தென்னம்புலம், நெய்விளக்கு, கள்ளிமேடு, தாமரைபுலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வயல்களில் தண்ணீர் தேங்கியதால் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்தன.
அறுவடை பணி
தற்போது மழை நின்றதால் வயல்களில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி விட்டு நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பயிர்க்காப்பீட்டு தொகை
இந்த அறிவிப்பு ஓரளவுக்கு ஆறுதல் அளித்தாலும், தமிழக அரசு பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய பயிர்காப்பீட்டு தொகை பெற்று தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.