வடகாடு பகுதியில் ஏரி, குளங்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

வடகாடு பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர்வார வேண்டும், நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-05 19:00 GMT

பருவமழை பெய்யவில்லை

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகள் மற்றும் குளங்கள் வறண்டு மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு இப்பகுதியில் போதிய அளவில் பருவமழை பெய்யவில்லை. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் அவற்றை குளங்களில் சேமித்து வைக்கக்கூடிய அளவிற்கு முறையான நீர் வழிப்பாதைகள் இல்லாமலும், குளங்கள் தூர்வாரப்படாத காரணத்தால் மழை நீர் வீணாக சென்றதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே ஏரி, குளங்கள் மற்றும் நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் ஆக்கிரமிப்பின் அளவு அதிகரித்து வருவதின் காரணமாக, பெரிய குளங்கள் கூட குட்டையாக மாறி வருகின்றன. மேலும் இவைகள் காலப்போக்கில் சென்னை போன்ற பெரு நகரங்களில் காணாமல் போன குளங்கள் போல் காணாமல் போகும் நிலை கூட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏரி, குளங்களை தூர்வார கோரிக்கை

வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் குளக்கரைகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் குளங்கள் முழுமையாக தூர்வாரி மீன் பிடி திருவிழா போன்றவை நடைபெற்று வரும் நிலையில், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் விவசாயிகள் வறண்டு போன குளங்களை தான் பார்க்க வேண்டி உள்ளது.

இதில், வடகாட்டில் உள்ள செட்டிகுளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரி மற்றும் குளங்களை தூர்வார வேண்டும் எனவும், நீர் நிலைகளில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்