கள்ளிமந்தையம் பகுதியில் முருங்கை விதைகளை சேகரிக்கும் விவசாயிகள்

கள்ளிமந்தையம் பகுதியில், முருங்கை விதைகளை சேகரித்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

Update: 2023-09-06 22:45 GMT

முருங்கை சாகுபடி

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம், கப்பல்பட்டி, தேவத்தூர், கொத்தையம், பொட்டிக்காம்பட்டி, பாறைவலசு, தும்பிச்சிபாளையம், பொருளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் முருங்கை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது அந்த பகுதியில், முருங்கைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால் முருங்கைக்காய்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. பறிப்பு கூலி கூட கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். விவசாயிகள் சிலர், தங்களது கால்நடைகளுக்கு முருங்கைக்காய்களை தீவனமாக கொடுக்கின்றனர்.

கொத்துக்கொத்தாய் காய்த்து தொங்கும் முருங்கைக்காய்களை பறிக்காமல், அப்படியே மரங்களிலேயே பெரும்பாலான விவசாயிகள் விட்டு விடுகின்றனர். தற்போது மரங்களில் காய்ந்த நிலையில் முருங்கைக்காய்கள் தொங்கி கொண்டிருக்கிறது.

விதைகள் சேகரிப்பு

அதேநேரத்தில், காய்ந்த காய்களை பறித்து விதை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விதைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ விதை ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தற்போது ஒரு கிலோ விதையை ரூ.100 முதல் ரூ.150 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு விதைகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முருங்கை விதைகளை பவுடராக்கியும், எண்ணெய்யாகவும் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகளில் விற்பனை

இதுகுறித்து கப்பல்பட்டியை சேர்ந்த விவசாயி சவடமுத்து கூறுகையில், கள்ளிமந்தையம் பகுதியில் தற்போது முருங்கைக்காய்கள் வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது, ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.4 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. விலை கட்டுப்படியாகாததால் கால்நடைகளுக்கு முருங்கைக்காய்களை தீவனமாக கொடுத்து வருகிறோம்.

மேலும் காய்களை மரங்களிலேயே காய விட்டு அதில் இருந்து விதைகளை எடுத்து விற்பனை செய்து வருகிறோம். இதுவும் எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை. எனவே முருங்கை விதைகளில் இருந்து, சமையல் எண்ணெய் தயாரித்து அதனை ரேஷன்டைகளில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்