இயற்கை விவசாயம் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்
இயற்கை விவசாயம் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என்று அரூரில் நடந்த கூட்டத்தில் வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார்கள்.
ஆலோசனை கூட்டம்
பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் அரூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) அருள் வடிவு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், இயற்கை வேளாண்மை முறையில் கிடைக்கும் விளைச்சல் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால் இயற்கை வேளாண் விளைபொருட்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக இவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே விவசாயிகள் இயற்கை வேளாண் உற்பத்தி முறைகளை பின்பற்றி விளை பொருட்களை நல்ல விலைக்கு விற்று அதிக லாபம் பெற முடியும் என்று கூறினார்.
தொழில்நுட்பங்கள்
இந்த கூட்டத்தில் விதை சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் ஜெயமாலா இயற்கை விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்யும் போது அவற்றிற்கு சான்று பெறுவதற்கான தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் உதவி வேளாண்மை இயக்குனர் சரோஜா, வேளாண்மை அலுவலர் குமார், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட களப்பணியாளர் கவிப்பிரியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.