திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்
சேதமடைந்த குறுவை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம்
மழையில் சேதமடைந்த குறுவை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும். தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். 2021-ம் ஆண்டு பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கலெக்டர் அலுவலங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.
முற்றுகை போராட்டம்
அதன்படி நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பையன் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட தலைவர் குருசாமி, மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் நடராஜன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், முகேஷ், ஒன்றிய செயலாளர் அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோரிக்கை மனுவை சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்தனர்.