குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை

கடைமடை பகுதியான தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-07-11 18:45 GMT

வாய்மேடு:

கடைமடை பகுதியான தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

காவிரியின் கடைமடை

காவிரியின் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் நாகை மாவட்டம் தலைஞாயிறில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான விதை தெளிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் எதிர்பார்த்தபடி தண்ணீர் கடைமடை பகுதிக்கு வரவில்லை. ஒரு சில ஆறுகளில் வந்தாலும், அதிகமான பாசனம் பெறும் அரிச்சந்திராநதி, அடப்பாறு உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளில் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆறுகளிலிருந்து பிரிந்து செல்லும் பெரும்பாலான வாய்க்கால்களிலும் குறிப்பாக ராஜன் வாய்க்கால், ஆலடி வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத நிலையே உள்ளது.

கேள்விக்குறியாகி உள்ளது

இதனால் குறுவை நேரடி விதைப்பு செய்த விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக அரிச்சந்திரா நதி மூலம் பாசனம் பெறும் மணக்குடி, ஓரடியம் புலம், திருமாளம், தலைஞாயிறு, வாட்டாக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு மூலம் குறுவை சாகுபடி செய்துள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் அளவிலான விளைநிலத்தின் தற்போதைய நிலை கேள்விக்குறியாகி உள்ளது. தொடர்ந்து நீரின்றி வெயிலில் காய்ந்து வரும் விதை கருகியும், இரண்டாக வெடித்து போகும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

முழுமையாக வந்து சேரவில்லை

இது குறித்து ஓரடியம்புலத்தைச் சேர்ந்த விவசாயி விக்னேஷ் கூறியதாவது:- இந்தாண்டு தலைஞாயிறு பகுதியில் குறுவை நேரடி விதைப்பு பணிகள் 100 சதவீதம் முடிந்துவிட்டது. கடந்தாண்டு இந்த நேரத்தில் 30 நாள் பயிராக இருந்தது. ஆனால் இந்தாண்டு தண்ணீர் வராததால் விதைப்பு காய்ந்து பயிர் கருகி வருகிறது. இந்தாண்டு இதுவரை தண்ணீர் வரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். இந்தாண்டு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர்தான் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. எனவே கூடுதலாக, முறை வைக்காமல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உயர் மட்ட குழு

இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கமல்ராம் கூறியதாவது:- மேட்டூர் அணை திறக்கபட்டு 1 மாதமாகியும் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் வந்து சேரவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் குறுவை பயிரை கண்டு விவசாயிகள் பரிதவிக்கின்ற காட்சி காண்போரின் கண்களை கலங்க செய்கிறது. குறிப்பாக மணக்குடி, காடந்தேத்தி, தலைஞாயிறு, ஓரடியம்புலம் பகுதிகளில் நெல் விதைப்பு செய்த வயல்களில் அறவே தண்ணீர் இல்லாமல் வறண்ட வயலாக காட்சியளிக்கிறது. இனி குறுவை சாகுபடியை காப்பாற்ற இயலாது என்பதால், தமிழக அரசு உடனடியாக உயர் மட்ட குழு ஒன்றை அனுப்பி ஆய்வு செய்து விசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்