நெல் விதையை சாலையில் தூவி விவசாயிகள் போராட்டம்
கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து நெல் விதையை சாலையில் தூவி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி:
கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து நெல் விதையை சாலையில் தூவி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்
குமரி மாவட்டம் முழுக்க முழுக்க விவசாய பாசன பகுதி நிறைந்த மாவட்டம் ஆகும். இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி, கும்பப்பூ சாகுபடி ஆகிய இரு பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி தொடங்கி உள்ளது.
அதன்படி கொட்டாரம் பகுதியிலும் கன்னிப்பூ சாகுபடியை விவசாயிகள் தொடங்கினர். இந்த சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி திறக்கப்பட்டது. ஆனால் தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதிக்கு இதுவரை தண்ணீர் சென்றடையவில்லை. இதனால் விவசாயிகள் நெல்விதைகளை கொட்டாரம் கடை வரம்பு பகுதியில் விதைக்காமல் வேதனையில் இருந்தனர்.
கன்னிபூ சாகுபடிக்காக நெல் விதைகளை வயல்களில் விதைக்க முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் நேற்று தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதிக்கு விவசாய பாசனத் திற்காக தண்ணீர் திறந்து விடக்கோரியும், இதுவரை தண்ணீர் வராததை கண்டித்தும் விவசாயிகள் திடீரென போராட்டம் நடத்தினர். அதாவது கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே நடு ரோட்டில் நெல் விதைகளை வீசி தங்களுடைய எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் பெருமாள் நாடார் மற்றும் விவசாயிகள் பாலசுப்பிரமணியம், லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.