மத்திய அரசை கண்டித்துபட்ஜெட் நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்
விழுப்பரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பட்ஜெட் நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் நலன்களை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேல்மாறன், மாவட்ட தலைவர் தாண்டவராயன், செயலாளர் முருகன், பொருளாளர் சிவராமன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அர்ச்சுணன், செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பட்ஜெட் நகல் தீ வைத்து எரிப்பு
இவர்கள் அனைவரும், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் நலன்களை முற்றிலும் புறக்கணித்த மத்திய அரசை கண்டித்தும், அவர்கள் வெளியிட்ட பட்ஜெட்டை கண்டித்தும் கோஷம் எழுப்பியவாறு பட்ஜெட் நகலை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர்.
கள்ளக்குறிச்சி
இதேபோல், கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு விவசாயிகள் சங்க வட்ட தலைவர் கொளஞ்சி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பூமாலை ஆகியோர் கலந்து கொண்டு பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, தங்கராசு, ஏழுமலை, கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரம் பகண்டை கூட்டுரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சாமிநாதன், செயலாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.