அதிகாரிகள் பங்கேற்காததை கண்டித்து நலன் காக்கும் முகாமை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்
பொன்னேரியில் விவசாயிகள் நலன் காக்கும் முகாமில் அதிகாரிகள் பங்கேற்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் பொன்னேரி வருவாய் கோட்டத்தில் விவசாயிகள் நலன் கருதி விவசாயிகள் நலன் காக்கும் முகாம் நடத்த உத்தரவிட்டிருந்தார்.
நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் பொதுப்பணி துறை, வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, நீர்வள ஆதார துறை, நெடுஞ்சாலை துறை, கூட்டுறவு துறை உள்பட விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் அனைவரும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பொன்னேரி துணை கலெக்டர் ஐஸ்வர்யா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் முகாமில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.