விழுப்புரம் பகுதியில் முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

விழுப்புரம் பகுதியில் முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

Update: 2023-04-27 18:45 GMT

முந்திரி அல்லது மரமுந்திரி என்பது அனகார்டியாசியே குடும்பத்தை சேர்ந்த ஒரு மரமாகும். முந்திரிக்கொட்டைகள் வறுக்கப்பட்டு உண்ணப்படுவதுடன், கறி சமைக்கவும், ருசியை சேர்ப்பதற்காக வேறு உணவுகளுடன் சேர்க்கப்பட்டும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள், மானாவாரி முறையிலும், சொட்டுநீர் பாசன முறையிலும் முந்திரி சாகுபடி செய்து வருகின்றனர்.

முந்திரி பருப்புக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பதப்படுத்தப்பட்ட முந்திரி பருப்பில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவை இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனாலேயே மற்ற பயிர்களை காட்டிலும் முந்திரி சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

மானியங்கள்

விழுப்புரம் அருகே கல்லப்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள், முந்திரி சாகுபடி செய்துள்ளனர். அவை தற்போது நன்கு செழித்து வளர்ந்து மஞ்சள் நிறத்திலும், அடர் சிவப்பு நிறத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் முந்திரி பழங்களாக காய்த்து தொங்குகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கல்லப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள், முந்திரி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டக்கலைத்துறையின் சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் முந்திரி சாகுபடியை 2½ ஏக்கரில் செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமான ரூ.18 ஆயிரத்தில் ஒட்டுச்செடிகள், இடுபொருட்கள் வழங்கப்பட்டது. இதேபோல் பழைய தோப்பு புதுப்பித்தல் என்ற திட்டத்தின் கீழ் 2½ ஏக்கருக்கு மானியத்தில் ரூ.25,200 மதிப்புள்ள நடவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத்தின் மூலம் விவசாயிகள் பலரும் முந்திரி சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மற்ற பயிர்களை காட்டிலும் முந்திரி சாகுபடி செய்வதால் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கிறது. ஒரு மரத்தில் இருந்து சுமார் 5 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கரில் இருந்து 10 மூட்டை வரை அறுவடை செய்யலாம். ஒரு மூட்டையில் குறைந்தபட்சம் 80 கிலோ வரை இருக்கும். மூட்டை ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.8,500 முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை போகிறது.

நல்ல லாபம்

அறுவடை செய்யப்படும் முந்திரி கொட்டைகளை 2, 3 நாட்கள் நன்கு காய வைத்து பிறகு, மூட்டை பிடித்து பண்ருட்டி பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பி விடுவோம். நல்ல லாபம் தருவதால் முந்திரி சாகுபடியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்