அந்நிய மரக்கன்றுகளை நடவு செய்ய விவசாயிகள் எதிர்ப்பு

கோத்தகிரி அருகே நீரோடையின் இருபுறமும் தண்ணீரை உறிஞ்சும் அந்நிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-05-19 21:15 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே நீரோடையின் இருபுறமும் தண்ணீரை உறிஞ்சும் அந்நிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

நீரோடைகள்

கோத்தகிரி பகுதியில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கூக்கல்தொரை பகுதி விவசாயிகள் உயிலட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீர், எரிசிபெட்டா, வா.ஊ.சி. நகர், ஓடேன்துறை கிராம விவசாயிகள் ஓடேன் நீரோடை, காக்காசோலை பகுதி விவசாயிகள் அப்பகுதி நீரோடையை நம்பி உள்ளனர்.

இதேபோல் குருகுத்தி நீரோடையை நம்பி குருகுத்தி, காவிலோரை, நெடுகுளா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கிடையே நீரோடைகள் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தன. இதையடுத்து வேளாண் பொறியியல் துறை சார்பில், நில அளவை செய்து, நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்பட்டது. நீரோடையின் பக்கவாட்டில் தடுப்புச்சுவர்களும் கட்டப்பட்டன.

அந்நிய நாட்டு மரக்கன்றுகள்

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தூர்வாரப்பட்ட நீரோடையின் இருபுறமும் தண்ணீரை அதிகளவு உறிஞ்சக்கூடிய அந்நிய நாட்டு மரக்கன்றான சாம்பிராணி கன்றுகளை வேளாண் பொறியியல் துறையினர் நடவு செய்து வருகின்றனர். இதற்கு நெடுகுளா ஊராட்சி நிர்வாகமும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பணியை தடுத்து நிறுத்தினர். ஆனால், தற்போது மீண்டும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சக்கூடிய சீகை, கற்பூரம், சாம்பிராணி உள்ளிட்ட அந்நிய நாட்டு மரங்களை முற்றிலுமாக அகற்றி, அதற்கு பதிலாக சோலை மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நீராதாரமான நீரோடைகளின் இருபுறமும் சாம்பிராணி மரக்கன்றுகளை நடவு செய்தால், தண்ணீரை மரங்கள் உறிஞ்சி, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் போகும் அபாயம் ஏற்படும். எனவே, இந்த மரக்கன்றுகளுக்கு பதிலாக சோலை மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஏற்கனேவே கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் பகுதியில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் அகற்றப்பட்டு, தண்ணீரை சேமிக்கும் வகையில் புற்கள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்