சர்க்கரை ஆலையில் அரவை தொடங்காததால் கரும்பு பயிர்களில் பூக்கள் பூத்துள்ளதால் மகசூல் பாதிப்பு விவசாயிகள் கவலை

Update: 2022-11-24 18:45 GMT

அரூர்:

அரூர் அருகே சர்க்கரை ஆலையில் அரவை தொடங்காததால் கரும்பு பயிர்களில் பூக்கள் பூத்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கரும்பு பயிர்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடவு செய்துள்ள கரும்பை அரவைக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக எதிர்பார்த்த மழை பெய்ததால் கரும்பு சாகுபடியின் பரப்பு அதிகரித்ததுடன், கரும்பு பயிர் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

விவசாயிகள் கவலை

இதனால் நடப்பாண்டில் சர்க்கரை ஆலையில் 4½ லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு திட்டமிடப்பட்டது. கடந்த காலங்களில் ஆலையில் கரும்பு அரவை தாமதமாக தொடங்கியது மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் கரும்பு வெட்ட முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது பருவநிலை மாற்றத்தால் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கரும்பு பயிர்களில் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன. இதனால் கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நடப்பாண்டில் சர்க்கரை ஆலையில் அக்டோபர் மாத இறுதிக்குள் கரும்பு அரவையை தொடங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கரும்பு அரவை தொடங்கவில்லை. உரிய பருவத்தில் கரும்பு அறுவடை செய்யாததால் கரும்பு பயிர்களில் பூக்கள் பூத்துள்ளன.

தரம் குறையும்

இதனால் கரும்புச்சாறு குறைந்து, எடை மற்றும் தரம் குறைவதுடன் விவசாயிகளுக்கு மகசூல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படும். மேலும் கரும்பு வெட்டும்போது அதனை ஒன்றாக சேர்த்து கட்டுவதற்கு தேவையான தோகை கிடைக்காத நிலை ஏற்படும் என்று கவலையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்