ஸ்கூட்டர் மீது சரக்கு வாகனம் மோதி விவசாயி பலி
புதுச்சத்திரம் அருகே ஸ்கூட்டர் மீது சரக்கு வாகனம் மோதி விவசாயி இறந்தார்.
புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி புதூர், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சின்னத்தம்பி (வயது 68). விவசாயி. இவர் தனது பேரன் தேஜேஸ்ராகவனுக்கு, முடி திருத்தம் செய்ய பெருமாள் கோவில் மேட்டிற்கு ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் பேரனை முடி திருத்தும் நிலையத்தில் விட்டு விட்டு, எதிர் திசையில் உள்ள காய்கறி கடைக்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சரக்கு வாகனம் ஒன்று சின்னத்தம்பியின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சின்னத்தம்பி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சின்னத்தம்பி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.