காட்டுப்பன்றி தாக்கி விவசாயி பலி
மோட்டார் சைக்கிளில் சென்றபோது காட்டுப்பன்றி தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
சத்திரப்பட்டி அருகே உள்ள ராமபட்டிணம்புதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 42). விவசாயி. இவர், அதே ஊரில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள தோட்டத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார், தனது மோட்டார்சைக்கிளில் ராமபட்டிணம்புதூருக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, சாலையை கடந்து சென்ற காட்டுப்பன்றி ஒன்று அவரை முட்டி தாக்கியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்தார். பின்னர் மீண்டும் காட்டுப்பன்றி ஆவேசத்துடன் ஜெயக்குமார், மோட்டார் சைக்கிளை முட்டி தள்ளியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெயக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.