மானூர் அருகே அரிவாளால் வெட்டப்பட்ட விவசாயி சாவு

மானூர் அருகே அரிவாளால் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-05-08 21:38 GMT

மானூர்:

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு செழியநல்லூரைச் சேர்ந்தவர் மணிசுடலை (வயது 60). விவசாயி. இவருடைய மகள் தனலட்சுமி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனுக்கும் (33) திருமணம் நடந்தது. இவர்களுக்கு காவ்யா (12), மகத் சாய் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறில் தனலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் உருதலட்சுமியை (28) பாலசுப்பிரமணியன் 2-வதாக திருமணம் செய்தார். தொடர்ந்து தனலட்சுமியின் குழந்தைகளை வளர்ப்பதில் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

கடந்த 1-ந்தேதி வெளியூரில் இருந்து வந்த மணிசுடலையின் மகன் ஜெயக்குமார் (32) தன்னுடைய சகோதரியின் குழந்தைகளை பார்ப்பதற்காக பாலசுப்பிரமணியனின் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த உருதலட்சுமிக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து சிறுமி காவியாவை மட்டும் ஜெயக்குமார், மணிசுடலையின் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தனது உறவினர் கந்தகுமாருடன் (31) கையில் அரிவாளுடன் மணிசுடலை வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். அப்போது மணிசுடலையின் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. பாலசுப்பிரமணியனிடம் இருந்து அரிவாளை ஜெயக்குமார் பிடுங்க முயன்றபோது, அவர்கள் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது.

படுகாயமடைந்த மணிசுடலையை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணியன், கந்தகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மணிசுடலை நேற்று முன்தினம் இரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பாலசுப்பிரமணியன், கந்தகுமார் ஆகியோர் மீதான கொலைமுயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்