பயிர் கழிவுகளை பண்ணை உரமாக்குவது எப்படி?
பயிர் கழிவுகளை பண்ணை உரமாக்குவது எப்படி? என்பது பற்றி வேளாண் அதிகாரி ஆலோசனை வழங்கி உள்ளார்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் வேளாண்மை உதவி இயக்குநர் அம்சவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பயிர் கழிவுகளை ஒரு சில விவசாயிகள் சாணக்குவியல் போட்டு ஓரளவு மக்க வைக்கின்றனர். பெரும்பாலும் முழுமையாக பயன்படுத்துவது இல்லை. குறிப்பாக கரும்பு பயிரில் கழிவாகும் சோகைகளை எரிக்கின்றனர். சாணம், மாட்டின் சிறுநீர், பயிர் கழிவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பயன்படுத்துதல் அவசியமாகும். பயிர் கழிவுகள் கிடைக்கும் காலங்களில் அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி அவற்றுடன் பண்ணை கழிவுகள் மற்றும் மரச்சருகுகள் ஆகியவற்றை நிழற்பகுதியில் 3 அடி ஆழமுள்ள குழிகளில் பல அடுக்குகளாக பரப்பி சாணக்கரைசலை மாட்டின் சிறுநீருடன் கலந்து ஒவ்வொரு அடுக்கிலும் சீராக தெளித்த நீர் வடியாத அளவில் போதிய ஈர நிலையில் பராமரிக்க வேண்டும். இடையில் ஒருமுறை கலைத்து ஈரப்படுத்தி திரும்ப குவிப்பதன் மூலம் மக்கும் தன்மையை அதிகரிக்க முடியும், மேலும் 3-4 மாதங்கள் நன்கு மக்கிய தொழு உரமாகவும், நுண்ணூட்டங்கள் கலந்த உரமாகவும் பயன்படுத்தலாம். இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது.