பிளஸ்-2 தேர்வு முடிந்து பிரியாவிடை பெற்று சென்ற மாணவ-மாணவிகள்

நெல்லையில் பிளஸ்-2 தேர்வு முடிந்த பின்னர் மாணவ-மாணவிகள் பிரியாவிடை பெற்று சென்றனர்.

Update: 2023-04-03 19:06 GMT

நெல்லையில் பிளஸ்-2 தேர்வு முடிந்த பின்னர் மாணவ-மாணவிகள் பிரியாவிடை பெற்று சென்றனர்.

பிளஸ்-2 தேர்வு முடிந்தது

கொரோனா ஊரடங்குக்கு பிறகு நடப்பு 2022-2023-ம் கல்வி ஆண்டு முழுமையாக தொடங்கி செயல்பட்டது. தொடர்ந்து பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கிய பிளஸ்-2 தேர்வை நெல்லை மாவட்டத்தில் சுமார் 21 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்.

தமிழ், ஆங்கில மொழி தேர்வுகளை தொடர்ந்து பாடவாரியாக தேர்வுகள் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடப்பிரிவு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது.

பிரியாவிடை பெற்ற மாணவ-மாணவிகள்

பிளஸ்-2 தேர்வுக்கு பின்னர் பள்ளி வாழ்க்கை முடிந்து மாணவ-மாணவிகள் கல்லூரி வாழ்க்கைக்கு செல்ல இருக்கிறார்கள். வெவ்வேறு திசைகளில் பயணிக்க உள்ள மாணவ-மாணவிகள் நேற்று தேர்வுக்கூடத்தில் இருந்து வெளியே வந்ததும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்று சென்றனர். சிலர் கண்ணீர் மல்க, ஆரத்தழுவி விடைபெற்றனர். சிலர் ஆட்டம், பாட்டம் என்று குதூகலத்துடன் நினைவு பரிசுகளையும் வழங்கினர். நண்பர்களின் சட்டைகளில் பேனா மை தெளித்து கொண்டனர்.

நெல்லை மாநகரத்தை பொறுத்தவரை பள்ளி இறுதி தேர்வில் எந்தவித அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாநகரில் நேற்று மதியம் பிளஸ்-2 தேர்வு நடைபெற்ற பள்ளிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மாணவ-மாணவிகளை உடனுக்குடன் வீடுகளுக்கு புறப்பட்டு செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

இதுதவிர விடுதிகளில் தங்கி இருந்து படித்த மாணவ-மாணவிகளை அவர்களது பெற்றோர், குடும்பத்தினர் வந்து, பெட்டி படுக்கைகளுடன் அழைத்து சென்றனர்.

நாளை மறுநாள், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

இதேபோன்று கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய பிளஸ்-1 தேர்வு நாளை (புதன்கிழமை) முடிவடைகிறது. தொடர்ந்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி, வருகிற 20-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்