கோவை விமான நிலையத்தில் பிரபல நடிகையிடம் சோதனை? விமான நிலைய அதிகாரி விளக்கம்

கோவை விமான நிலையத்தில் நடிகை சனம் ஷெட்டியிடம் சோதனை நடத்தப்பட்டதா? என்பது குறித்து விமான நிலைய அதிகாரி விளக்கம் அளித்து உள்ளார்.

Update: 2023-01-18 18:41 GMT

கோவை,

நடிகை சனம் ஷெட்டி சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து இளைஞர்களின் மனதை கவர்ந்து வருகிறார். மேலும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டி சமீபத்தில் கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் சென்றார். அப்போது அவரது மற்றும் சில பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் சென்றேன். அப்போது விமானத்தில் ஏறும் முன் அங்கிருந்த பெண் அதிகாரி ஒருவர் எனது கைப்பை மற்றும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த 2 பேரின் பைகளை சோதனை செய்தார். இதுகுறித்து கேட்டபோது அந்த அதிகாரி குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பிற்காக சோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

சோதனை செய்த இடத்தில் எந்த ஸ்கேனர் கருவியும் இல்லை. வெறும் கண்களால் ஒரு நபரை பார்த்து சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்துவது மன வேதனை தருகிறது. இந்த விமானத்தில் 190 பேர் பயணம் செய்தனர். மற்றவர்கள் பைகளை ஏன் சோதனை செய்யவில்லை. அவர்கள் எதுவும் கொண்டு செல்ல மாட்டார்களா? குறிப்பிட்ட சிலரை மட்டும் சோதனை செய்வது கஷ்டமாக உள்ளது. சோதனை செய்தால் அனைவரின் உடைமைகளையும் சோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் பேசியுள்ளார்.

விமான நிலைய அதிகாரி விளக்கம்

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி கோவை விமான நிலையத்தில் பயணிகள் 2 கட்டமாக சோதனை செய்யப்படுகின்றனர். விமான நிலையத்தின் உள்ளே செல்லும் போது ஒரு முறையும், விமானத்தில் ஏறும் முன் ஒரு முறையும் சோதனை செய்யப்படுகிறது.

நடிகை சனம் ஷெட்டி கூறுவது போல குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்து சோதனை செய்யப்படவில்லை. இருப்பினும் அவரது புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்