பட்டுக்கூடுகள் விலை வீழ்ச்சி
தேனி மாவட்டத்தில் பட்டுக்கூடுகள் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பட்டுக்கூடு உற்பத்தி
தேனி மாவட்டத்தில், கோட்டூர், சின்னமனூர், உப்புக்கோட்டை, பள்ளப்பட்டி, கூடலூர், போடி உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்பெரி செடிகள் சாகுபடி செய்யப்படுகிறது. அதன்மூலம் பட்டுப்புழு வளர்த்து, பட்டுக்கூடுகள் உற்பத்தியில் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் வெள்ளை ரக பட்டுக்கூடு, கோலார் கோல்டு (மஞ்சள்) ரக பட்டுக்கூடு என 2 ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை உப்புக்கோட்டை விலக்கு பகுதியில் உள்ள பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்துக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். வியாபாரிகள் அங்கு வந்து பட்டுக்கூடுகளை வாங்கிச் செல்கின்றனர்.
விலை வீழ்ச்சி
பட்டுக்கூடுகள் விலை கடந்த ஒரு மாத காலமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ பட்டுக்கூடுகள் ரூ.750 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது. சில நாட்களாக ரூ.550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் சிலரிடம் கேட்டபோது, "தற்போது தரமான பட்டுக்கூடு ரூ.550 முதல் ரூ.600 வரையும், 2-ம் தரமான கூடுகள் ரூ.150 முதல் ரூ.200 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது. ஒரு கிலோ ரூ.700-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் இந்த தொழிலில் தொடர முடியும். இல்லை என்றால் வாழ்வாதார பாதிப்புகள் ஏற்படும். இளம்புழு, மருந்துகள் விலை எல்லாம் உயர்ந்து விட்டன. பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளன. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. ஆனால், பட்டுக்கூடின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதே நேரத்தில் பட்டுநூல் விலை குறையவில்லை. பட்டுக்கூடுகள் விற்பனையில் இடைத்தரகர்கள் தலையீடு உள்ளது. கட்டுப்படியாகும் விலையை நிர்ணயம் செய்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்" என்றனர்.