போடியில் போலி டாக்டர் கைது
போடியில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.;
தேனி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிமளா தேவிக்கு போடி பகுதியில் போலி டாக்டர்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலி டாக்டர்கள் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி அரசு டாக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போடியில் அரசு டாக்டர் பாலமுருகன் தலைமையில் ஒரு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது போடி நகர் போலீஸ்நிலையம் அருகே உள்ள கிளினிக் ஒன்றில் அவர்கள் திடீர் ஆய்வு செய்தனர். அங்கு டாக்டராக இருந்த நாகராஜ் என்பவர் அலோபதி மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் டாக்டர் பாலமுருகன் புகார் கொடுத்தன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் நாகராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.