கடற்கரைகள், பூங்காக்கள், வள்ளுவர் கோட்டம்... சுற்றுலா தலங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கருத்து
தமிழகம், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த இடமாகும். பழமையான கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் கோவில்களுக்கும் புகழ் பெற்றது. சோழர் கால தஞ்சைப் பெரிய கோவிலும், பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும், கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.;
தஞ்சாவூர், மதுரை, கும்பகோணம், காஞ்சீபுரம் ஆகியவை கோவில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபமும், திருவள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும்.
தமிழகத்தில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட 5 உலக பாரம்பரியக் களங்களும் உள்ளன.
மாமல்லபுரம் மற்றும் அழியாத சோழர் பெருங்கோவில்களாக கருதப்படும், தஞ்சாவூர் பிரகதீசுவரர் (பெருவுடையார்) கோவில், கங்கைகொண்ட சோழபுரம், ஐராவதேசுவரர் கோவில், நீலகிரி மலை ரெயில் பாதை, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் உள்ளிட்டவை அதில் அடங்கும்.
சுற்றுலா தலங்களில் வசதிகள்
தமிழகத்தில் சுற்றுலா தலங்களுக்கு பஞ்சமே இல்லை. பொதுவாக பொதுமக்கள் பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களை சென்று பார்த்து விட்டு வருவது வழக்கம்.
சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களாக மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பிர்லா கோளரங்கம், அமீர் மகால், அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா பொது நூலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னைப் பல்கலைக் கழகம், கலா சேத்ரா, வள்ளுவர் கோட்டம், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, முட்டுக்காடு படகுக்குழாம், சென்னை, அரசு அருங்காட்சியகம் உள்ளிட்டவை உள்ளன.
அங்கு தினசரி நூற்றுக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு இதுபோன்ற சுற்றுலா தலங்களில் போதிய வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளனவா? என்பவை குறித்தும், என்னென்ன வசதிகள் வேண்டும் என்பன குறித்தும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
இசை, கலை நிகழ்ச்சிகள்
பெரம்பூரைச் சேர்ந்த இல்லத்தரசி நாகேஸ்வரி கூறியதாவது:-
வரலாற்று சிறப்பு மிக்க வள்ளுவர் கோட்டத்தை பார்வையிட வந்தோம். முழுவதும் சுற்றிப் பார்வையிட்டோம். இங்குள்ள மேடையில் தற்போது மார்கழி மாதங்களில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களை வள்ளுவர் கோட்டத்திற்கு வந்து செல்லுமாறு செய்யலாம். இதன் மூலம் இசை கலைஞர்களும், கலை நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும் பயனடைவார்கள்.
அதேபோல் அரசு திட்டங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விளம்பர பலகைகளையும் கூட நிறுவலாம். காதல் ஜோடிகள் எல்லை மீறுவதை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. மாநகரின் மையப்பகுதியில் இருக்கும் வள்ளுவர் கோட்டம் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
வாகனங்களுக்கு தடை
மெரினா கடற்கரையை பார்வையிட வந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் கீர்த்தனா கூறியதாவது:-
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்வதால் சற்று ஓய்வுக்காக மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் அவ்வப்போது செல்வது வழக்கம். அப்போது மெரினா கடற்கரையில் சர்வீஸ் சாலையில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இந்தச் சாலையில் எந்த ஒரு வேகத்தடையும் இல்லை.
புத்தாண்டு தினத்தில் வாகனங்களை சர்வீஸ் சாலையில் அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் நிம்மதியாக மெரினா கடற்கரைக்கு சென்றுவர முடிந்தது. இதேபோன்று மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நிரந்தரமாக வாகனங்களுக்கு தடை விதிக்கலாம். இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் கடற்கரைக்கு சென்றுவர முடியும்.
பொது இடங்களில் கவுரவம்
சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவிகள் சாந்தினி, நந்தினி ஆகியோர் கூறியதாவது:-
கல்லூரியில் ஓய்வு நேரம் கிடைக்கும்போது ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவிற்கு செல்வது வழக்கம். மரம், செடி, கொடிகளை பார்வையிடுவதன் மூலம் மனதிற்கு அமைதி கிடைக்கிறது. ஆனால் இங்கு உள்ள சூழ்நிலை வேறு மாதிரி இருக்கிறது. இதுபோன்ற பூங்காக்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள், பெண்கள், குடும்பத்தினர் என பல தரப்பினரும் வந்து செல்வார்கள்.
இதனால் காதல் ஜோடிகள் பொறுப்பை உணர்ந்து பொது இடங்களில் கவுரவமாக நடந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களின் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. மீறி செயல்படுபவர்களை நிர்வாகமும் கண்டிக்க வேண்டும். அதேபோல் கட்டணத்தை ஆன்-லைனில் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். பூங்காவில் மீன் தொட்டிகள் அமைத்து கலர் மீன்களையும் பார்வையாளர்களுக்கு வைக்கலாம். பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம்.
லண்டன் தம்பதி
லண்டனில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வந்திருந்த டிரெவர் ஹான்- எலினா மாயோ தம்பதி கூறியதாவது:-
மெரினா கடற்கரை சர்வதேச புகழ் பெற்றதாக அறிந்து கடற்கரையை பார்வையிட வந்தோம். கடற்கரை மிக நீளமாக இருப்பதால் பேட்டரி கார் வசதியும் செய்யலாம். வரைமுறை இல்லாமல் மணல் பகுதிகளில் கடைகள் அதிகளவில் இருக்கின்றன. கடைகள் இருப்பதில் தவறில்லை. ஆனால் அவற்றை ஒரு பகுதியில் முறையாக ஒழுங்குப்படுத்தி இருக்கைகள், குடிநீர் வசதிகள் செய்து தரவேண்டும்.
அருகிலேயே மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் வேறு நடந்து வருகிறது. அந்த சேவை தொடங்குவதற்கு முன்பாக மெரினா கடற்கரையை மேலும் மேம்படுத்துவதுடன், இரவு விளக்குகளை அதிகரித்து பாதுகாப்பையும் மேலும் பலப்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகளை சுற்றுலா பயணிகளுக்கு செய்து தருவதன் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
வள்ளுவர் கோட்டத்தில் திருக்குறள்
பெரம்பூரைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி யாஷிகா கூறியதாவது:-
வள்ளுவர் கோட்டத்தை பார்ப்பதற்கு வந்து உள்ளோம். ஆனால் வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் குறள்களை எழுதி இருப்பதுடன் அதற்கான பொருளையும் பார்வைக்கு வைத்தால் என்போன்ற மாணவர்களுக்கு அது பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் பொதுமக்கள் பலர் வந்து செல்வதால் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்துதர வேண்டும். வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தேரையும் முழுமையாக பார்வையிட முடியவில்லை. மாநகரின் முக்கியமான பகுதியில் இருக்கும் இதுபோன்ற இடங்களை நன்கு பராமரித்து இளைஞர்கள், மாணவர்களின் அறிவுத்திறமையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன அமைதியைத் தேடி
மயிலாப்பூரைச் சேர்ந்த இல்லத்தரசி உமா கூறியதாவது:-
வீட்டிலேயே அடைந்து கிடக்காமல் மன அமைதிக்காகவும், கடல் காற்று வாங்குவதற்காகவும் குழந்தைகளுடன் மெரினா கடற்கரைக்கு அடிக்கடி வந்து செல்வோம். பொதுவாகக் கடற்கரை பகுதிகளை சுத்தமாக வைத்திருந்தாலே மனது அமைதியாக இருக்கும். ஆனால் கடற்கரையில் உடைந்த கண்ணாடி பாட்டில்களால் குழந்தைகளுக்கு காலில் ரத்த காயம் ஏற்படுவது, குப்பைகளால் முகம் சுளிப்பது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளால் மனது வலிக்கிறது. எனவே கடற்கரை பகுதியை சுத்தமாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை கொட்டுபவர்களையும் தண்டிக்க வேண்டும்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சி.வசந்தகுமார் கூறும்போது, ''சென்னையின் அடையாளமாக உள்ள வள்ளுவர் கோட்டத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும். பொதுமக்கள் பயனடையும் வகையில் திருவள்ளுவர் தொடர்பான புத்தகங்கள் பார்வைக்கும், படிப்பதற்கும் வைப்பதுடன் போதிய இடவசதியும் செய்து தரவேண்டும். இதன் மூலம் மாணவர்கள், இளைய சமுதாயத்தினர் பயனடைவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.