தொடர் மழையால் நிரம்பிய கண்மாய்கள்

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்களில் கடல் போல் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் 2-ம் போக விவசாயத்திற்கு பயன்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Update: 2022-12-28 18:45 GMT


சிவகங்கை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்களில் கடல் போல் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் 2-ம் போக விவசாயத்திற்கு பயன்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கண்மாய்கள்

தமிழகத்தின் தென் மாவட்டங்களாக உள்ள சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கோடைக்காலங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட சம்பவம் கடந்த காலங்களில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பொதுப்பணித்துறை சார்பில் கோடைக்காலத்தில் தூர்வாரப்பட்டு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் கடந்த கால ஆண்டுகளில் பருவ மழை, பல்வேறு புயல்கள் காரணமாக பெய்த தொடர் மழை, வடகிழக்கு பருவ மழை உள்ளிட்ட மழைக்காலங்களில் பெய்த மழை முறையாக கண்மாய்களுக்கு வரத்துக்கால்வாய்கள் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழை முறையாக வரத்துக்கால்வாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டு இங்குள்ள கண்மாய்கள், ஊருணிகளில் நிரம்பப்பட்டது. அதன் பின்னர் அந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் விவசாய பணிகளை முழுமையாக செய்தனர்.

இதுதவிர கடந்த சில ஆண்டுகளாக வறட்சியாக காணப்பட்ட இடங்களில் கோடைக்காலங்களில் குடிதண்ணீர் பற்றாக்குறை இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டது. மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக திருப்பத்தூர் அருகே உள்ளே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் அமைந்துள்ள கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் தண்ணீர் இன்றி காணப்பட்டதால் அந்த காலக்கட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட வராமல் இருந்த நிலையும் ஏற்பட்டது.

2-ம் போக விவசாயம்

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அந்த கண்மாய்கள் நிரம்பியதால் பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டு பறவைகள் சீசன் காலம் முடிந்தும் கூட இனப்பெருக்கம் செய்த நிலையில் இங்கேயே தங்கி உள்ளது.

இந்தநிலையில் சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை காரைக்குடி, குன்றக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், காளையார்கோவில் உள்ளிட்ட இடங்களில் பெய்த தொடர் மழை காரணமாக அந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் தற்போது தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

மகிழ்ச்சி

ஏற்கனவே இந்த பகுதியில் குறுகால பயிர்களாக நெல் பயிரிட்ட விவசாயிகள் தற்போது அந்த நெல் பயிர்கள் தை பொங்கல் விழாவிற்கு முன்னதாக அறுவடைக்கு தயாராக உள்ளது. தற்போது இந்த கண்மாய்கள் நிரம்பி உள்ளதால் 2-ம் போக விவசாய பணிகளுக்கு இந்த தண்ணீர் பயன்படுத்த பயனாக உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தை மாதம் முதல் பல்வேறு இடங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர்களின் வீர விளையாட்டுகள் இடம் பெறுவது வழக்கம். இதற்காக தற்போது காளை வளர்ப்போர் சார்பில் தனது காளைகளுக்கு இந்த கண்மாயில் நிரம்பியுள்ள தண்ணீர் நீச்சல் பயிற்சிகளையும் அளித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்