சென்னை,
சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் 104 போலீஸ் நிலையங்கள் செயல்படுகின்றன. சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் இரவு வேளையில் காவல் பணியில் ஒரு போலீஸ்காரர் மட்டும் பணியில் உள்ளார்.
இதனால் இரவில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார் கொடுக்க வரும் நபர்கள் திடீர் அத்துமீறலில் ஈடுபடுவது, அடாவடி செய்வது, ரகளையில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக நடக்கின்றன. சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த வாரம் தர்கா மோகன் என்ற ரவுடி, அங்குள்ள போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ்காரர் மட்டுமே பணியில் இருந்ததால், தர்கா மோகனை உடனடியாக கைது செய்ய முடியவில்லை. இதேபோல சென்னை போலீஸ் நிலையங்களில் இரவு வேளைகளில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதுதொடர்பாக ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் இரவு வேளையில் ஒரு காவலர் மட்டுமே பணியில் இருப்பதை உறுதி செய்தார்.
இது போதுமானது அல்ல என்பதால், சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் இரவு வேளையில் 2 போலீஸ்காரர்கள், கூடுதலாக ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.