தேனீ மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா தரர்மத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது34). இவர் நாமக்கல்லில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பெரியப்பட்டி சாலை நரிகுறவர் காலனி விநாயகர் கோவில் அருகில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த 3 பேர் கத்தி முனையில் பாக்கெட்டில் இருந்த ரூ.500-ஐ பறித்து சென்றனர். இது குறித்து பாலமுருகன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த நிஷார் (24), நவீத் (24), பிடில்முத்து தெருவை சேர்ந்த சதாம் உஷேன் (19) ஆகிய 3 பேர் பாலமுருகனிடம் கத்தி முனையில் பணம் பறித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நிஷார் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.