மாநில கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு
மாநில கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தனித்துவமான மாநில கல்விக்கொள்கை வகுக்கும் நோக்கில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு, அரசாணை (நிலை) எண்.98 பள்ளிக்கல்வித் (வரவு செலவு-2) துறை, ஜூன் 01,2022 - ன் படி ஓய்வு டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் த.முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழு அமைத்து ஆணையிட்டுள்ளது.
மாநிலக் கல்விக் கொள்கை சம்மந்தமாக பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடமிருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை செப்.15, 2022க்கு முன்பாக stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, Centre for Excellence Building, 3வது தளம், களஞ்சியம் கட்டிடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025 என்கிற அலுவலக முகவரிக்கோ அனுப்பிவைக்கலாம் என கடந்த ஜூலை 14 ம் தேதி செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கால அவகாசத்தை, மாநிலக் கல்விக் கொள்கைக் குழு மேலும் கூடுதலாக ஒரு மாத காலம் நீட்டித்து, அக்டோபர்.15, 2022 -ம் தேதி வரை கருத்துக்கள், ஆலோசனைகளைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கருத்துக்கள், ஆலோசனைகள் பெறும் பொருட்டு மண்டல அளவில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்திட மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு மண்டலவாரியாக கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.