பாரம்பரிய வாழை ரகங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்-ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் பேச்சு
பாரம்பரிய வாழை ரகங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் எம்.அங்கமுத்து பேசினார்.
பாரம்பரிய வாழை ரகங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் எம்.அங்கமுத்து பேசினார்.
2 நாட்கள் கருத்தரங்கம்
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் பாரம்பரிய மற்றும் புவிசார் குறியீடு கொண்ட வாழை ரகங்களின் ஏற்றுமதி குறித்து 2 நாட்கள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆர்.செல்வராஜன் தலைமை தாங்கினார்.
புதுடெல்லி வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (ஏ.பி.இ.டி.ஏ.) தலைவர் எம்.அங்கமுத்து பல்வேறு தொழில்நுட்ப கையேடுகளை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏற்றுமதியை அதிகாிக்க வேண்டும்
வாழைப்பழத்தில் அதிக அளவிலான சத்துகள் உள்ளன. அதோடு எளிமையாக, அனைவரும் வாங்கக்கூடிய விலையில் விற்கப்படுகிறது. இந்திய அளவில் வெளிநாட்டு ஏற்றுமதி பொருட்களில் அரிசி, கோதுமை, சோளத்திற்கு அடுத்த இடத்தில் வாழைப்பழம் தான் உள்ளது. உலக அளவிலான வாழைப்பழ ஏற்றுமதியில் இந்தியாவில் இருந்து 80 சதவீத அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால் நமது நாட்டின் பாரம்பரிய வாழை வகைகளில் பல மதிப்பு கூட்டப்படாமலும், ஏற்றுமதி செய்யப்படாமலும் உள்ளது. எனவே பாரம்பரிய வாழை ரகங்களை மதிப்பு கூட்டி குறைந்தபட்சம் 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
3 மடங்கு வருமானம் உயரும்
தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் செல்வராஜன் பேசும்போது, அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி, பாரம்பரிய மற்றும் புவிசார் குறியீடு கொண்ட வாழை ரகங்களின் ஏற்றுமதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது, முழுமையான வெளிப்படையான சந்தைப்படுத்தும் அமைப்பு, ஏற்றுமதி திறனை மேம்படுத்துவது, நவீன சந்தைப்படுத்தும் திறனுடன் அறுவடைக்கு பிறகான மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள் போன்றவற்றால் நமது விவசாயிகளின் வருமானம் மூன்று மடங்கு உயரும்' என்றார்.
விழாவில் வெளிநாட்டு வர்த்தகத்தின் சென்னை மண்டல இயக்குனர் ராஜலட்சுமி தேவராஜ், கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி, பாகல்கோட் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் இந்திரேஷ், புதுடெல்லி வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் ரவீந்திரா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
வாழை கண்காட்சி
நிகழ்ச்சியில் வாழை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நிர்வாகிகள், முற்போக்கு விவசாயிகள், சந்தைப்படுத்துவோர் மற்றும் விரிவாக்க பணியாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக முன்னாள் இயக்குனர் உமா வரவேற்று பேசினார். முடிவில் சுரேஷ்குமார் நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து நடந்த முதல் நாள் கருத்தரங்கில் வாழையின் வளத்தை பாதுகாப்பது, பாரம்பரிய வாழை மற்றும் புவிசார் குறியீடு, வாழை ரகங்களின் ஏற்றுமதி தாவர பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்த கண்காட்சியில், ஏராளமான வாழையின் பாரம்பரிய ரகங்கள், வாழை நாரில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்று ஏராளமான வாழை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இடம் பெற்று இருந்தன. இவற்றை விவசாயிகளும், கல்லூரி மாணவ-மாணவிகளும், தொழில்முனைவோரும் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த கருத்தரங்கு இன்றும் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.