கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்த நபரின் வீட்டில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு - அதிர்ச்சி சம்பவம்
கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்த நபரின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை,
கோவை உக்கடம் பகுதியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார்.
காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி அதில் இருந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கார் வெடிவிபத்தில் உயிரிழந்தது யார்? என்பது குறித்தும் காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால் , அந்த முகவரி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்தது உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பது தெரியவந்துள்ளது.
ஜமேசா முபின் உக்கடம் பகுதியில் பழைய துணி விற்பனை செய்யும் வியாபாரம் செய்துவந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜமேசா முபினிடம் என்ஐஏ விசாரணை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து உயிரிழந்த ஜமேசா முபினின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கார் வெடிவிபத்தில் உயிரிழந்த ஜமேசா முபினின் வீட்டில் சில வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ஜமேசா முபினின் வீட்டில் இருந்து பொட்டாட்சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சோதனைச்சாவடியில் போலீசாரை பார்த்து பயந்து ஓடியதில் விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த ஜமேசா முபின் மீது எந்த வழக்குகளும் இல்லை ஆனால் அவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியுள்ளது. வருங்கால திட்டத்திற்காக வெடிபொருட்களை வைத்திருந்திருக்கலாம் என டிஜிபி தெரிவித்துள்ளார்.
கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்த நபரின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.