சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து; 3 பேர் பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கணஞ்சாம்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் மொத்தம் 41 அறைகள் உள்ளன. இதில் நேற்று 38 பேர் பணியாற்றி கொண்டு இருந்தனர். மாலை 3 மணி அளவில் ஒரு அறையில் ராக்கெட் வெடி மற்றும் சிறிய பிளாஸ்டிக் பந்து போன்ற டப்பாக்களில் பட்டாசுளுக்கான மருந்து செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசுகள் திடீரென பயங்கரமாக வெடித்து சிதறியது.
2 பேர் பலி
அப்போது வெடிவிபத்து ஏற்பட்டு, தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியதால் அதில் இருந்த பட்டாசு அறைகளும் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 8 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் சாத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்த குமார் மகள் முனீஸ்வரி (வயது 30) மற்றும் ஒரு ஆண் என 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சாத்தூர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மற்றொரு பட்டாசு ஆலையிலும் விபத்து
சிவகாசி வேலாயுதம் ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டியில் உள்ளது. இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி நடைபெற்றது. 80 பெண்கள் உள்பட 140 பேர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலை 11.30 மணி அளவில் திடீரென பட்டாசு ஆலையில் ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது.
அந்த அறையில் பேன்சிரக பட்டாசுகளை திருத்தங்கல்லை சேர்ந்த ரவி(58), எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சாமுவேல் ஜெயராஜ்(48) தயாரித்துள்ளனர். அப்போது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக அது வெடித்து சிதறியது. வெடி விபத்தில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து கட்டிட இடுபாடுகளில் சிக்கி கொண்டனர்.
ஒருவர் சாவு
இடிபாடுகளுக்குள் சிக்கிய ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சாமுவேல்ஜெயராஜை சக தொழிலாளர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ரூ.3 லட்சம் நிவாரணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் கணஞ்சாம்பட்டியில் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் இறந்த ரவி என்பவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம், பச்சைமலையான் கோட்டை, பாலாஜி நகரில் நடந்த வெடி விபத்தில் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகியோர் இறந்தனர். அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.