பழனியில் மனநல காப்பகம் திறக்கப்படுமா?; சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

பழனியில் மனநல காப்பகம் திறக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2023-06-28 21:30 GMT

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் சிலர் தங்கள் வீட்டு முதியோர்கள், மனநலம் பாதித்தவர்களை அழைத்து வருகின்றனர். ஒருசிலர் சாமி தரிசனம் முடிந்த பின்பு அவர்களை மட்டும் பழனியில் விட்டு செல்கின்றனர். இவர்கள் கோவில் அன்னதானம் மற்றும் யாசகம் பெற்று அடிவாரம் பகுதியில் சாலையோரம் வாழ்ந்து வருகின்றனர். இதனால் பழனி நகர், அடிவாரத்தில் சுற்றித்திரியும் முதியோர்கள், மனநலம் பாதித்தவர்களை மீட்டு பராமரிக்க வேண்டும் என்றும், இதற்காக பழனியில் மனநல காப்பகம் அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான தாராபுரம் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா விடுதியை மனநலம் காப்பகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சில மாதங்களுக்கு முன்பு அங்கு சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றது. இந்த பணிகள் எல்லாம் தற்போது முடிவடைந்துவிட்டது. இருப்பினும் மனநல காப்பகம் திறக்கப்படாமல் உள்ளது. எனவே ராமகிருஷ்ணா விடுதியில் அமைக்கப்பட்ட மனநல காப்பகத்தை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்