முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்-அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்

முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2023-08-25 20:34 GMT

முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருக்குவளை

அரசு பள்ளிக்கு வரும் மாணவர்கள் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சரின் காலை உணவு என்ற திட்டத்தை கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் 15-ந் தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவுகள் வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக இந்த திட்டம் தமிழகம் முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் மதுரை மாநகராட்சியில் உள்ள 73 மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 136 மாணவ-மாணவிகள் காலை உணவு பெற்றனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் இந்த திட்டம் நேற்று விரிவுப்படுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அதனை தொடங்கி வைத்தார். அதன்தொடர்ச்சியாக அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மதுரை மாவட்டம், மேற்கு ஊராட்சி ஒன்றியம் சின்னபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்து மாணவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.

கள்ளர் பள்ளி

பின்னர் அவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் 420 கிராம ஊராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் மொத்தம் 949 அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 52 ஆயிரத்து 298 மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகள் தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும்.அதனை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதில் கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர்கள் சரவணன், மோனிகா ராணா, மேற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வீரராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அதே போல் மாநகராட்சி பகுதியில் உள்ள முத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர்கள் பாண்டிச்செல்வி, சுவிதா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் நாகேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூமிநாதன் எம்.எல்.ஏ.

மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட திரவுபதி மாநகராட்சி பள்ளியில் பூமிநாதன் எம்.எல்.ஏ. காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் உணவு அருந்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் முகேஷ்சர்மா, கவுன்சிலர்கள் முத்துமாரி ஜெயக்குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி,அவைத்தலைவர் சுப்பையா, பகுதி செயலாளர்கள் போஸ், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மேலூர்

மேலூர் நகராட்சி அழகர்கோவில் ரோட்டில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி, சிவன் கோவில் தொடக்கப்பள்ளி, கருத்தபுளியம்பட்டி தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை மாணவ மாணவிகளுக்கு மேலூர் நகர்மன்ற தலைவரும், மேலூர் தி.மு.க.நகர் செயலாளருமான முகமதுயாசின் தொடங்கி வைத்தார். இதில் மதுரை மண்டல பொறியாளர் மனோகரன், மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், நகராட்சி பொறியாளர் சீமா, சுகாதார ஆய்வாளர் சுப்பையா, ஓவர்சியர் சரவணன், நகரமைப்பு ஆய்வாளர் சரவணகுமார், கணக்கர் தியாகராஜன், நகராட்சி உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்