110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை
வேளாங்கண்ணி-நாகை இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
வேளாங்கண்ணி-நாகை இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
வேளாங்கண்ணி-நாகை அகல ரெயில் பாதை
வேளாங்கண்ணி-நாகை இடைேயயான அகல ரெயில் பாதை சுமார் 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த ரெயில் பாதை கடந்த 2010-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.இந்த நிலையில் திருச்சி-காரைக்கால் வரை ரெயில் பாதைகள் மின் மயமாக்கும் பணிகள் நடந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாகை-வேளாங்கண்ணி இடையேயான ரெயில் பாதையும் மின்மயமாக்க திட்டமிடப்பட்டு அனைத்து பணிகளும் நடந்து முடிந்து விட்டது.
மின்சார ரெயிலை இயக்கி சோதனை
இதையடுத்து கடந்த 20-ந் தேதி ரெயில்வே தெற்கு மண்டல பாதுகாப்பு ஆணையர் அபேகுமார் ராய் தலைமையில் தொழில்நுட்ப குழுவினர் வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் டீசல் ரெயிலை இயக்கி சோதனை செய்தனர்.
அதேபோல இதே வழிதடத்தில் மின்மயமாக்கல் பணியானது முடிந்து விட்டதால் மின்சார ரெயில் என்ஜினை கொண்டு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி ரெயில்வே மின் மயமாக்கல் அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர்.
110 கிலோ மீட்டர் வேகத்தில்...
தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சஞ்சீவ் நந்தன், கோட்ட முதன்மை இயக்கவியல் அதிகாரி அரிக்குமார் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பாதையில் மின்சார ரெயிலில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மின் கம்பிகளின் உயரம், எர்த், எலக்ட்ரிக் சாதனங்கள், ரெயிலின் வேகம், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இவை அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்த பின்னர், வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம், ரெயில் நிலைய மேலாளர் பிரபாகர் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
எச்சரிக்கை
110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரெயில் இயக்கப்படும் என்பதால் தண்டவாளங்களில் கால்நடைகளை நடமாட விடக்கூடாது என்றும், பொதுமக்கள் தண்டவாளத்தில் நிற்க கூடாது என்றும் ரெயில்வே துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.