முதல்-அமைச்சர் காரை நோக்கி ஓடிய பெண்ணால் பரபரப்பு
போலீஸ் பாதுகாப்பையும் மீறி முதல்-அமைச்சர் காரை நோக்கி ஓடிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழாவையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் வந்தார்.
கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அவரது வாகனம் வந்தபோது போலீஸ் பாதுகாப்பை மீறி பெண் ஒருவர் மனு கொடுக்க ஓடிச்சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அதனை மீறி அந்த பெண், முதல்-அமைச்சர் வாகனத்தை நோக்கி ஓடினார். மனுவுடன் ஓடி வருவதைக் கண்ட முதல்-அமைச்சர் தனது வாகனத்தை நிறுத்தி அந்த பெண்ணிடம் மனுவை பெற்றுக்கொண்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஓடிச் சென்று முதல்-அமைச்சரிடம் மனு அளித்தனர்.
போலீஸ் பாதுகாப்பை மீறி பெண் ஒருவர் முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.