பெட்ரோல் கேனுடன் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் வாரிசு வேலையாக துப்புரவு பணியாளர் வேலை கேட்டு வந்த பெண் பெட்ரோல் கேனுடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-05 18:45 GMT

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் வாரிசு வேலையாக துப்புரவு பணியாளர் வேலை கேட்டு வந்த பெண் பெட்ரோல் கேனுடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்ரோல் கேனுடன் போராட்டம்

காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய போது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.

இதையடுத்து அவரது மகளான முத்துமாரி (வயது 40) என்பவர் தனது தாயின் துப்புரவு பணியாளர் பணியை வாரிசு அடிப்படையில் தனக்கு தரவேண்டும் என கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

அவருக்கு வேலை கிடைக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து நேற்று காரைக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த முத்துமாரி கோரிக்கை மனுவுடன் வந்து அதிகாரிகளை சந்தித்தார்.

அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் முத்துமாரி திடீரென நகராட்சி அலுவலகம் முன்பு தனக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் எனவும் இல்லையென்றால் தீக்குளிக்க போவதாகவும் மிரட்டல் விடுத்தபடி ெபட்ரோல் கேனுடன் போராட்டம் நடத்தினார். அப்போது நகராட்சி அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

பேச்சுவார்த்தை

அப்போது நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். ஆனால் தன்னை இவ்வாறு 7 ஆண்டுகளாக அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதால் எனது குழந்தையுடன் கஷ்டப்பட்டு வருவதாக கூறி மீண்டும் நகராட்சி அலுவலகத்தின் வாசல் முன்பு அவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து காரைக்குடி வடக்கு, மகளிர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சி தலைவர் முத்துதுரையும் போராட்டத்தில் ஈடுபட்ட முத்துமாரியிடம் முறையாக அலுவலகத்தில் என்னை வந்து பார்த்து என்னிடம் உங்கள் கோரிக்கையை கொடுங்கள். இவ்வாறு அனுமதியின்றி அலுவலகத்தை வழிமறித்து போராட்டம் நடத்துவது தவறு என்று எச்சரித்தார். இதையடுத்து போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஒரு மாத காலத்திற்குள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்த பின்னர் அவர் அங்கிருந்து சென்றார். பெட்ரோல் கேனுடன் வந்த பெண் நகராட்சி அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு எற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்