மூடப்பட்ட கழிவுநீர் கால்வாயை பொக்லைன் மூலம் தோண்டி சீரமைப்பு

ஆரணி அருகே இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் அடைப்பு ஏற்படுத்தப்பட்ட கழிவுநீர் கால்வாயை போலீசார் குவிக்கப்பட்டு அதிகாரிகள் பொக்லைன் மூலம் தோண்டி சீரமைத்தனர்.

Update: 2023-09-08 10:47 GMT

ஆரணி

ஆரணி அருகே இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் அடைப்பு ஏற்படுத்தப்பட்ட கழிவுநீர் கால்வாயை போலீசார் குவிக்கப்பட்டு அதிகாரிகள் பொக்லைன் மூலம் தோண்டி சீரமைத்தனர். அதனை கண்டித்து ஒரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கழிவுநீர் கால்வாய் பிரச்சினை

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் காலனி பகுதியிலிருந்து கழிவுநீா் கால்வாயில் வரும் கழிவுநீரை சேவூர் காலனி பகுதிக்குள் வராமல் ஒரு தரப்பினர் மணலை குவித்து தடுத்து இருந்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் துர்நாற்றத்தாலும் கொசுத்தொல்லையாலும் அவதிப்பட்டு வந்தனர்.

போலீசார் குவிப்பு

இது குறித்து ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு தரப்பினரையும் அழைத்துப் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இரு பகுதியினரிடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை தாசில்தார் மஞ்சுளா தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் அசோக் குமார், பிரமீளா, கிராம நிர்வாக அலுவலர்கள் புருஷோத்தமன், லோக சுந்தரி, கோபால் ஆகியோர் பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு வந்தனர்.

அப்போது தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், சுந்தரேசன், மற்றும் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து ராட்டினமங்கலம் காலனி பகுதியில் இருந்து வரக்கூடிய கால்வாயை அடைக்கப்பட்டுள்ள இடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி கழிவுநீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சாலை மறியல்

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேவூர் காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூரில் திடீரென கருங்கல்லை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களைகலைந்து போக செய்தனர்.

பின்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாய் இடத்தை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இப் பணியின் போது சேவூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தரணி, ராட்டினமங்கலம் ஊராட்சி தலைவர் செல்வம், 2 ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் சித்ரா வெங்கடேசன், மகேஸ்வரி, ஊராட்சி எழுத்தர்கள் உள்பட பலர் குவிந்திருந்தனர்.

அப்போது இரு தரப்பினருமே வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தனர்.

பரபரப்பு

அதிகாரிகளும் போலீசாரும் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தியவாறு கால்வாய் அடைப்பை ஒரு வழியாக சீரமைத்து கழிவுநீர் வழிந்தோட நடவடிக்கை எடுத்தனர். இதனால் அந்த பகுதிகளில் ஒரே பரபரப்பாக இருந்தது.

மேலும் செய்திகள்