நாட்டுக்காக உழைப்பு, வாழ்க்கையை தியாகம் செய்தவர்கள் முன்னாள் ராணுவத்தினர்

நாட்டுக்காக உழைப்பு, வாழ்க்கையை தியாகம் செய்தவர்கள் முன்னாள் ராணுவத்தினர் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

Update: 2023-05-15 20:56 GMT

நாட்டுக்காக உழைப்பு, வாழ்க்கையை தியாகம் செய்தவர்கள் முன்னாள் ராணுவத்தினர் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

முன்னாள் படை வீரர்கள்

முப்படை, துணை ராணுவப்படையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற வீரர்களின் சோழநாடு பட்டாளம் அமைப்பின் சார்பில் சமூகசேவை நிகழ்ச்சி, அமைப்பின் 4-ம் ஆண்டு தொடக்க விழா, பணி நிறைவு பாராட்டு விழா தஞ்சையில் நடந்தது.

விழாவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள், புத்தகங்கள், வாள்வீச்சு விளையாட்டு கழக மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும் இந்திய ராணுவத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றி ஊருக்கு திரும்பிய அந்தோணிக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

1 லட்சம் மரக்கன்றுகள்

விழாவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு, புத்தாடை, விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. தஞ்சை மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.

மரக்கன்றுகளை நட்டதோடு மட்டும் அல்லாமல் அதனை வளர்க்கும் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சோழநாடு பட்டாளம் அமைப்பினரும் மரக்கன்றுகள் நடும் பணியில் இணைந்து பணியாற்றினர்.

நாட்டுக்காக உழைப்பு

முப்படையினர் இந்த நாட்டுக்காக தங்களது உழைப்பு, வாழ்க்கையை கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ஈ.சி.ஹெச்.எஸ். பொறுப்பு அதிகாரி கென்னடி, குந்தவை நாச்சியார் கலைக்கல்லூரி பேராசிரியர் தமிழடியான் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்கள், அவர்களின் குடும்பத்தினர், சோழநாடு பட்டாளத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்