முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலி
முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலியானார். இதையடுத்து, அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் ராணுவ வீரர்
கந்தர்வகோட்டை அருகே உள்ள மட்டங்கால் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60). முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது சென்னையில் மத்திய அரசு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தமிழ் கொடி அரசு. இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தனது சொந்த கிராமத்திற்கு வந்த திருநாவுக்கரசு கந்தர்வக்கோட்டையில் இருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது விபத்தில் படுகாயம் அடைந்த திருநாவுக்கரசு சாலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் திருநாவுக்கரசு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் வாகனம் மோதியதால் தான் திருநாவுக்கரசு இறந்து உள்ளார். எனவே விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை கண்டுபிடிக்கக்கோரி கந்தர்வகோட்டை காந்தி சிலை முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் மற்றும் தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து, திருநாவுக்கரசின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.