அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்திட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் கள்ளக்குறிச்சி கலெக்டர் வேண்டுகோள்

Update: 2022-07-24 17:15 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற மருத்துவமனையில் 32-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நகரமன்ற தலைவர் சுப்ராயலு தலைமையில் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் குமரன், துணைத் தலைவர் ஷமீம்பானு அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடைபெற்ற 93 இடங்கள் உள்பட 2 ஆயிரத்து 448-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதற்காக 416 தடுப்பூசி குழுக்கள் நியமிக்கப்பட்டு 40,500 எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி கடந்த 15-ந் தேதி முதல் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை 75 நாட்களுக்கு அனைத்து மையங்களிலும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. எனவே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

அப்போது கோட்டாட்சியர் பவித்ரா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா, கள்ளக்குறிச்சி தாசில்தார் விஐயபிரபாகரன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்