கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி நாகர்கோவிலில் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி நாகர்கோவிலில் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிறந்தநாள் விழா
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் தி.மு.க.வினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதேபோல் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடந்தது.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சி.என்.செல்வன், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் இ.என்.சங்கர், மீனவர் அணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வட்டக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருணாநிதி பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டு பகுதிகளிலும் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. நிர்வாகிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். மேலும் பல இடங்களில் கட்சிக்கொடி ஏற்றியும், இனிப்பு வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதேபோல் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.