புரட்டாசி மாதத்திலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் களைகட்டிய மக்கள் கூட்டம்...!
காசிமேடு மீன் மார்க்கெட் மக்கள் கூட்டம் களைகட்டியுள்ளது.
சென்னை,
புரட்டாசி மாதம் என்றாலே விரதத்துக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலானோர் விரதம் இருந்து இறைவனை வழிபடுவார்கள். அசைவ பிரியர்களும் புரட்டாசி மாதத்தில் மீன்-இறைச்சி சாப்பிடாமல் தங்கள் வாய்க்கு பூட்டு போட்டிருப்பார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் மீன்-இறைச்சி வியாபாரம் மந்தமாகவே இருக்கும்.
இந்த வருடம் புரட்டாசி மாதம் கடந்த 17-ந்தேதி பிறந்தது. புரட்டாசி மாதத்தையொட்டி சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. காசிமேடு, காவாங்கரை, திருவான்மியூர், சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட நகரின் மற்ற மீன் மார்க்கெட்களிலும் கடந்த வாரம் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2 வாரங்களாக மீன் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன் விற்பனை சூடுபிடித்துள்ளது அதிகாலை முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் அசைவ பிரியர்கள் அதிக அளவில் வந்தர். திருக்கை, கடம்பா, வஞ்சிரம், சங்கரா, சூரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். வஞ்சிரம் கிலோ ரூ.1300, சங்கரா ரூ.400 முதல் ரூ.800, நெத்திலி ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுவரை இல்லாத வகையில் புரட்டாசி மாதத்திலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்று மக்கள் களைகட்டியுள்ளது. இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.