14 மலைக்கிராம மக்களை வெளியேற்ற நடவடிக்கை; வனத்துறையை கண்டித்து ஆலோசனை

பெரியகுளம் அருகே 14 மலைக்கிராம மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

Update: 2023-06-17 21:00 GMT

பெரியகுளம் அருகே மலைப்பகுதியில் அகமலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, கண்ணக்கரை, குறவன்குழி, கருங்கல்பாறை, பட்டூர், படப்பம்பூர், சொக்கன்அலை, சின்னமூங்கில், பெரியமூங்கில், கரும்பாறை உள்பட 14 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மலைவாழ் மக்களும் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மலைப்பகுதியில் வாழும் மக்களை வெளியேற்றும் இந்த நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே வனத்துறையை கண்டித்து அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட 14 மலைக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைப்பகுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில், மலைப்பகுதியில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கையை வனத்துறை கைவிடாவிட்டால் மலைக்கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போடி தாலுகா அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டமும், அதனைத்தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்