தஞ்சை ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி சிக்கினார்

தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது தப்பி ஓடிய விசாரணை கைதியை போலீசார் மடக்கிப்பிடித்தனர். இவர் கோவிலில் சாமி கும்பிட்ட பெண்ணிடம் நகை திருடிய போது கைது செய்யப்பட்டவர் ஆவார்.

Update: 2022-12-03 20:30 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது தப்பி ஓடிய விசாரணை கைதியை போலீசார் மடக்கிப்பிடித்தனர். இவர் கோவிலில் சாமி கும்பிட்ட பெண்ணிடம் நகை திருடிய போது கைது செய்யப்பட்டவர் ஆவார்.

நகை திருடியவர் கைது

தஞ்சையை அடுத்த வெண்ணாற்றங்கரையில் உள்ளது நரசிம்மபெருமாள் கோவில். இந்த கோவிலில் கடந்த மாதம் 26-ந்தேதி சாமி கும்பிடுவதற்காக தஞ்சை ரெட்டிபாளையம் சாலையை சேர்ந்த உமா என்பவர் வந்தார்.அவர் சாமி தரிசனம் செய்த போது காவி வேட்டி அணிந்த நபர் 7 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றார். இதனைக்கண்டு திடுக்கிட்ட உமா திருடன், திருடன் என சத்தம போட்டார். இதையடுத்து அந்த பகுதி மக்கள் திரண்டு அந்த நபரை பிடித்து கட்டி வைத்து தாக்கினர்.

தப்பி ஓட்டம்

இது குறித்து தகவலறிந்ததும் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்நபரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருவையாறை சேர்ந்த ரமேஷ் (வயது 57) என்பது தெரிய வந்தது. மேலும் தாக்குதலில் பலத்த காயமடைந்த ரமேஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ரமேஷ் கடந்த 1-ந் தேதி இரவு ஆஸ்பத்திரியிலிருந்து தப்பியோடிவிட்டார்.

போலீசார் மடக்கிப்பிடித்தனர்

இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை ரமேஷ், தஞ்சைபள்ளியக்ரஹாரம் பகுதியில் நின்றுக்கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் அங்கு சென்று ரமேசை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்