ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
தற்காலிக பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு;
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் பணியாளர்
ஈரோடு மாமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது 25). இவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக பல்நோக்கு பணியாளராக (மருத்துவ உதவியாளர்) வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சுதா பணிக்கு சென்றார்.
அப்போது சுதாவிடம் ஆஸ்பத்திரியை கூட்டி பெருக்க வேண்டும் என்றும், கழிவறையை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவ பணியாளர் ஒருவர் கூறியதோடு தரக்குறைவாக பேசியதாகவும் தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுதா இது எங்களுடைய வேலை இல்லை என்றும், நாங்கள் செவிலியர்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் நியமனம் செய்யப்பட்டு உள்ளோம் என்றும் கூறி உள்ளார்.
தற்கொலை முயற்சி
இதனால் அவருக்கும், அந்த பணியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சுதா, தான் வேலை பார்த்த வார்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்கு சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.